Friday, June 10, 2011

அம்மாவிடம் அடி உதை - ஐம்பது ரூபாய்


1992 - 93 இருக்கும் அப்பொழுது எனக்கு வயசு பத்து.  தத்தித்  தத்தி மிதிவண்டி ஓட்டப்  பழகின நாட்கள்.  அம்மா எதுச்சொன்னாலும் செய்யத்  தயாராக இருப்பேன். " டேய் கடைக்குப் போடான்னு "  அம்மா சொன்னால் போதும் உடனே மிதிவண்டியை தள்ளிக்கொண்டு கடைக்குப் போவேன்.  பக்கத்துத் தெருவில் கடை இருந்தாலும் மிதிவண்டிதான்.  எங்க கிராமத்தில் வெகு சில நண்பர்களுக்குத் தான் மிதிவண்டி ஓட்டத் தெரியும் அதில் நானும் ஒருவன்.  இந்த மிதிவண்டியை எங்க அப்பா ரூபாய் 150 /- கொடுத்து ஒருவரிடம் வாங்கினார்.  என் அப்பா உபயோகித்ததுப் போக என்னிடம் தான் இந்த மிதிவண்டி அதிக நேரம் இருக்கும்.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் என்றால் போதும் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு நண்பர்கள் அனைவரும் கெலம்பிட வேண்டியதுதான் தண்ணீரைப் பார்க்க. ஏரியில பனபழம் பொறுக்கச் செல்வது, குளம் குட்டையில மீன் பிடிக்கக்தூண்டில் எடுத்துட்டு செல்வது, ஈச்சம்பழம் பொறுக்கப் போகுவது, பனங்கா வெட்டப் போகறதுக்கு எல்லாம் இந்த மிதிவண்டி தான். இந்த மிதிவண்டியில மூன்று அல்லது நான்கு பேர் கூடப் பயணம் செய்வது வழக்கம். எங்க ஊர்ல அப்பலாம் டிவி டெக் வழக்கம், எதாவது விசேசம் என்றால் இந்த டிவி டெக் இருக்கும். என் நண்பர்கள் எல்லாரும் டிவி டெக் பார்க்க மிதிவண்டியை எடுத்துட்டுக் கெலம்பிட வேண்டியதுதான். 

எனக்கு மறதி அதிகம், சில நேரத்துல என் மிதிவண்டியைப் பூட்டாம விட்டுடுவேன், மிதிவண்டியை நிறுத்தின இடத்த மறந்திட்டு ஏதோ சிந்தனையில வீட்டுக்கு வந்துடுவேன். அம்மா சத்தம் போடுவாங்க.  அப்புறம் ஞாபகப் படுத்திப் பாத்துட்டு நிறுத்தின இடத்துக்குப்  போய் எடுத்துட்டு வருவேன். என் மிதிவண்டி எனக்கு தோழன் மாதிரி எப்பொழுதும் என் கூடவே இருக்கும்.

எங்க வீடு கூரை வீடு.  இரண்டு திண்ணை நடுவில் செல்ல பாதை. பாதை முடிந்ததும் கதவு. கதவுக்கு பின்புறம் நாங்க தூங்கர  அறை. வலதுபுறம் ஒரு  இருக்கும். அந்த தொம்பைல நான் ஒருவன் முழுகும் அளவுக்குப்  பெரியது.  இந்த தொம்பையில அந்த காலத்துல நெல், கேழ்வரகு கொட்டி வைக்கிறது என்று அம்மா சொல்லுவாங்க,  ஆனால் எங்களுக்கு நெல் கொட்டி வைக்கற அளவுக்கு வசதி இல்ல.  அதனால காய்ந்த வரட்டிய அதுல போட்டு இருப்பு வச்சிக்குவோம். இது மழை காலத்துக்கு எங்க சமையலுக்கு உதவும். இந்த தொம்பைக்கு இடதுபுறம் பின்னாடி அறைக்குச் செல்ல வழி இருக்கும்.  இந்த அறைக்குக்  கதவு கிடையாது.   ஒரு தடுப்பு சுவர் தான் இந்த அறையைப்  பிரிக்கும்.  இந்த அறையில்  அடுப்பு இருக்கும்.  அப்படியே பின்னாடி பூஜை அறை. படிக்கற நண்பர்களே ரொம்ப கற்பனை வேண்டாம். அடுப்புக்குப்  பின்னாடி சுவர் அதில் சாமி படம் மாட்டி இருக்கும்.  நல்லா ஞாபகம் இருக்கு மூன்று படம் வரிசையாக இருக்கும் முதல் படம் லட்சுமி,  இரண்டாவது படம் சரசுவதி, படம் முருகன், வள்ளி, தெய்வானை, விநாயகர் இவங்க நாலு பேரும்  இருப்பாங்க. இந்த படங்களுக்கு கீழ ஒரு பெரிய மரப்பெட்டி அந்த பெட்டியில தான் எங்களோட லாம்துணி இருக்கும். வீட்டுக்கும் பின்னாடி மாட்டு கொட்டடி அதில் இரண்டு பசு மாடு.

அப்பாவைப் காலையில நாலு மணிக்கலாம் கரும்பு வெட்ட கரும்புத்  தோட்டம் போய்டுவாங்க. அப்பா பண்ணை மேஸ்திரி. அவங்க கூட 11 பேரு வேலபாக்கறாங்க. எங்க அப்பா காலையில பாக்கறதே ரொம்ப கடினம்.  தூங்கி எழுந்தா அம்மா முகத்துல தான்.  காலையில ஏழு மணிக்கு வீட்டுல சமையல் முடிச்சிட்டு, என்னையும் பள்ளிக்குக் கெளப்பி விட்டுட்டு,  அப்பாவுக்குச் சோறு ஒரு தூக்குச் சட்டியில எடுத்துட்டு,  கூட வீட்டுல இருக்கற இரண்டு மாட்டையும் மேச்சலுக்கு கூட்டிட்டு போய்டுவாங்க. அம்மாவுக்கு அப்பா வெட்டி போடுற கரும்பைக்  கத்தையாகக்  கட்டற வேலை.  எங்க அம்மா மதியும் 1 மணிக்கலாம் வந்துடுவாங்க. வரும்பொழுது தலையில கொஞ்சம் சோலை மாட்டுக்கு எடுத்துட்டு வருவாங்க. அம்மா வீட்டுக்கு வரும் முன்னாடி மாடு வந்துடும்.  அதை வச்சி அம்மா வராங்கன்னு கண்டுப்  பிடிச்சிடலாம். சோலையில எப்படியும் மூன்று கரும்பு இருக்கும். அப்பா கரும்ப ஆலைக்கு ஏற்றி விட்டுட்டு மதியும் மூன்று மணிக்கு மிதிவண்டியில கொஞ்சம் சோலைய ஏத்திட்டு வருவாங்க, அதுலயும் இரண்டு அல்லது மூன்று கரும்பு இருக்கும். இவங்க இரண்டு பேரும் சேர்ந்து உழைச்சா அவங்களுக்கு 15 ரூபாய் தான் சம்பளம்.

பள்ளி முடிஞ்சதும் ஆட்டம் பாட்டத்தோட நண்பர்கள் கூட வீடு வருவேன். முதல் நினைப்பு மிதிவண்டி தான். மிதிவண்டியை எடுக்கும் பொழுது எங்க அம்மாகிட்ட இருந்து சத்தம் வரும் " டேய் இந்த கரும்ப வித்துட்டு வாடானு". அம்மா எடுத்து வந்த கரும்பைத்  துண்டுத்  துண்டா போட்டு வச்சி இருப்பாங்க. பத்து பதினஞ்சி துண்டுத் தேறும். ஒரு துண்டு கரும்பின் விலை "10 பைசா" .  இந்த துண்டுகளை எடுத்துட்டு தெருத்  தெருவா விக்கவேண்டியது தான். எப்படியும் இரண்டு, மூன்று துண்டுகள் விக்காது. அம்மாகிட்ட கொடுத்துட்டு விளையாடப் பசங்கக்  கூட ஓடிடுவேன்.

எங்களுக்கு அப்போது கிரிக்கெட் மோகம் இல்லை. குன்டு அடிப்பது, கோலாட்டம், பம்பரக் குத்து போன்ற விளையாட்டுதான் பெரும்பாலும் பசங்க விளையாடுவாங்க.  எங்களுக்கு இந்த விளையாட்டு ஒரு பருவகாலம் மாதிரி வந்து போகும். குண்டு அடிச்சா ஊரே குண்டு அடிக்கும்.  பம்பரம் விளையாட்டு வந்தால் குண்டு மறஞ்சி போய்டும். இப்படியே  ஒரு ஒரு விளையாட்டும் வரும், போகும்.

ஒரு நாள் கரும்பெல்லாம் வித்துட்டு வீட்டுக்கு வந்தேன். அம்மா " டேய் இங்க வாடா"  போய் அரிசி வாங்கிட்டு வாடான்னுச் சொன்னாங்க. கைல "ஐம்பது ரூபாய்"  கொடுத்து கூட ஒரு பையை கொடுத்தாங்க. உடனே மிதிவண்டியை எடுத்துட்டு மாடர்ன் ரைஸ் மில்லை நோக்கிப்  பயணம். இந்த ரைஸ் மில் சுமார்  ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இங்க அரிசியின் விலை கொஞ்சம் மலிவு. ஒரு கிலோ அரிசி ஆறு அல்லது ஏழு ரூபாய் இருக்கும்.

ரைஸ் மில் போனதும்  பையைபார்த்தா எடுத்து வந்த  பணத்தைகாணோம். கால் சட்டையில் இருக்கும்  சொக்காவைதொழவித் தொழவி பார்த்தேன் பணம் இல்லை.  கையில் கொண்டு வந்த பையை தொழவித் தொழவி பார்த்தபோதும் பணம் இல்லை. அங்கேயே அழ ஆரம்பிச்சிட்டேன். அழுதுக்கொண்டே வந்த வழி எல்லாம் தேட ஆரம்பிச்சிட்டேன். மிதிவண்டியைதள்ளிக்கொண்டே வந்த வழி எல்லாத்தையும் தேடிட்டு இருந்தேன்.  இரண்டு மணி நேரமா தேடிட்டு இருந்தேன் பணம் கிடைக்க வில்லை.  வானம் இருளை தொட்டுக்கொண்டு இருந்தது.  என்னைத்  தேடி அம்மா வந்தாங்க.  நான் திருத்  திருன்னு முழிச்சிட்டு இருந்ததை பார்த்துட்டு " என்னடா ஆச்சின்னு" கேட்டாங்க.  பணம் தொலைந்து விட்டதுன்னு சொன்னதும் அங்கேயே அடி உதய் ஆரம்பிச்சிடுச்சி.  அப்படியே புடிச்சி இழுத்துட்டு வந்தாங்க. தெருவெல்லாம் என் விசாரணை தான்.

அந்த வயசுல ஐம்பது ரூபாய் மதிப்பு தெரியல, ஆனால் இப்பொழுது தெரிகிறது அந்த ஐம்பது ரூபாயை சேர்க்க என் அப்பா அம்மா இரண்டு பேரும் மூன்று நாட்கள் உழைக்க வேண்டும் என்று.

இதை படிக்கும் சில நண்பர்களுக்கு அவருடைய சின்ன வயசு ஞாபகம் வரும். ஒரு சில நண்பர்களுக்குப்  புதிதாகத் தெரியும்.  சில நண்பர்களுக்கு வியப்பாக இருக்கும். வெகு சில நண்பர்களுக்குச் சிரிப்பாகத்  தோணலாம்.  உண்மை என்னவென்றால் என் குடும்பம் மாதிரி அதிக குடும்பகள் இருக்கு இந்த இந்திய கிராமங்களில். நான் நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கிறேன்.  என்னை போல் மேலே வருவோர்கள் சொற்ப எண்களே.  நாம் தேவையில்லாத 
விசயங்களைத்ப்   பேசறதை விட்டுட்டு நாம் நம் மனித நேயத்தை  பேசுவோமே !!


நன்றி :-
   இது எனது முதல் சிறுகதை. இதை படித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய விமசர்ணங்களை எதிர்பாக்கும் உங்கள் அன்பு நண்பன்.

No comments: